--- --:--:-- --

விருதுநகரில் இன்று திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு..!

3

திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு விருதுநகரில் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. அந்த வகையில் திமுகவும் தனது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலையில் மும்முரம் காட்டி வருகிறது.

 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் பொதுக் குழு, அதைத் தொடர்ந்து உடன்பிறப்பே வா சந்திப்பு, கரூரில் திமுக முப்பெரும் விழா, திமுக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாடு, திருப்பூர் மற்றும் தஞ்சையில் மகளிர் அணி தரப்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு என தொண்டர்களை உயிரோட்டத்துடன் வைக்க திமுக முனைப்பு காட்டி வருகிறது.

 

அதன் தொடர்ச்சியாக, விருதுநர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.

 

தேர்தலை எதிர்நோக்கி, திமுகவின் இளைஞர் அணி, மகளிர் அணி மாநாடுகள் அடுத்தடுத்து மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக இளைஞரணி தென் மண்டல மாநாடு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.

 

இதில் 20 திமுக அமைப்பு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தென் மண்டலத்தை சார்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர, பேரூராட்சி அலுவலக இளைஞரணி நிர்வாகிகள் உள்பட சுமார் ஒன்றரை லட்சம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

 

மாநாட்டுக்காக ஏறத்தாழ 100 ஏக்கர் பரப்பளவில் முன்னேற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றன. பந்தல், மேடை, நிர்வாகிகளுக்கு உணவு, முதல்வர் ரேம்ப் வாக் செல்ல மேடை என நடைபெற்ற பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

 

Right Menu Icon