நாடு முழுவதும் நாளை ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால் பண பரிவர்த்தனை சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் 2ஆவது மற்றும் 4ஆவது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன்படி, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளனர்.
இதில், இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராம மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர்.
ஏற்கெனவே சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் குடியரசு தின விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தொடர்ந்து நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வங்கி சேவை பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது. இதனால் மக்களிடையே பண பரிவர்த்தனை சேவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.






