--- --:--:-- --

குப்பையில் கண்டெடுத்த 45 சவரன் தங்கம் – போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

9

டுமையான பணிச்சுமை, தரம் பிரிக்கப்படாத குப்பைகள் என சவால்கள் நிறைந்த சூழலிலும், ஒருவரின் நேர்மை மட்டும் குறையாமல் இருப்பதற்குச் சான்றாகத் திகழ்கிறார் சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர் பத்மா. சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கச் செய்து, ஒட்டுமொத்த தமிழகத்தின் பாராட்டுகளையும் அவர் பெற்று வருகிறார்.

 

சென்னையின் இதயப் பகுதியான தியாகராய நகர், எப்போதும் மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக இயங்கும் ஒரு வணிக மையம். நேற்று இப்பகுதியில் உள்ள முப்பாத்தம்மன் கோவில் தெரு மற்றும் வண்டிக்காரன் சாலை சந்திப்பில், மாநகராட்சி பெண் தூய்மைப் பணியாளர் பத்மா வழக்கம்போல குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

அப்போது, சாலையோரம் கேட்பாரற்று கிடந்த ஒரு பிளாஸ்டிக் கவர் பத்மாவின் கவனத்தை ஈர்த்தது. சந்தேகத்தின் பேரில் அதனை எடுத்துப் பிரித்துப் பார்த்த அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பையில் பளபளக்கும் தங்க நகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

 

சுமார் 45 சவரன் எடையுள்ள அந்த நகைகளின் மதிப்பு தற்போதைய சந்தை விலையில் சுமார் ரூ. 45 லட்சம் ஆகும். இவ்வளவு பெரிய தொகையைச் சிந்தித்துப் பார்க்காமல், உடனடியாக அந்த நகைப்பையுடன் பாண்டிபஜார் காவல் நிலையத்திற்கு பத்மா விரைந்தார். அங்குள்ள அதிகாரிகளிடம் விவரத்தைக் கூறி நகைகளை ஒப்படைத்தார்.

 

போலீசார் நடத்திய விசாரணையில், நங்கநல்லூரைச் சேர்ந்த நகை வியாபாரி ரமேஷ் என்பவர் ஏற்கனவே தனது நகைப்பையைத் தொலைத்துவிட்டதாகப் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் ரமேஷ் கூறிய விவரங்கள் வருமாறு: பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் ரமேஷ், தியாகராய நகரில் உள்ள தனது நண்பரைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது கையில் இருந்த நகைப்பையை அருகில் இருந்த ஒரு தள்ளுவண்டி கடையின் மீது வைத்துவிட்டு, கவனக்குறைவாக அங்கேயே விட்டுச் சென்றுள்ளார்.

 

உரிய ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர், போலீசார் அந்த 45 சவரன் நகைகளை ரமேஷிடம் ஒப்படைத்தனர். தனது உழைப்பால் கிடைத்த ஊதியத்தை விட, அடுத்தவர் பொருள் மீது ஆசைப்படாத பத்மாவின் இந்த நேர்மையான செயலைக் கண்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ந்து போயுள்ளனர். வறுமை நிலையிலும் நேர்மை தவறாத தூய்மைப் பணியாளர் பத்மாவின் செயல், சமூகத்தில் இன்னும் மனிதநேயம் உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டுகிறது எனப் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Right Menu Icon