தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக, டெல்லியில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள், கரூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் துயரச் சம்பவம் குறித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினர், காயமடைந்தோர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, தவெக நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், கரூர் ஆட்சியர், கரூர் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும், கரூருக்கு விஜய்யின் பரப்புரை வாகனம் வரவழைக்கப்பட்டு இஞ்ச் பை இஞ்ச் ஆக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சம்பவத்தின்போது வாகனத்தை இயக்கிய பரணிதரனை, பரப்புரை வாகனத்தில் விஜய் அமரும் இடத்தில் அமர வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக சிபிஐ விசாரணை சூடுபிடித்துள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த இன்று ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, இன்று காலை 10.15 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.
விசாரணைக்கு ஆஜராகும் விஜயிடம், கரூர் சம்பவம் தொடர்பாக பல கிடுக்கிப்பிடி கேள்விகளை அதிகாரிகள் கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, விஜய்க்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கும்படி டெல்லி மாநகர காவல் ஆணையரிடம் தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனையேற்று, மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு நடைமுறைகள் அடிப்படையில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து விஜய் செல்ல உள்ள அனைத்து பகுதிகளிலும் முழுப் பாதுகாப்பு வழங்க டெல்லி காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது. விஜயின் தனிப் பாதுகாவலர்கள் தவிர மத்திய ரிசர்வ் படை மற்றும் டெல்லி காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் தனது சென்னை இல்லத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக விஜய் விமான நிலையம் புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார். அங்கிருந்து சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில், சிபிஐ விசாரணை வளையத்திற்குள் விஜய் சென்றிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஒருபுறம் ஜனநாயகன் பட வெளியீடு தாமதம் என்றால், மறுபுறம் சிபிஐ விசாரணை என விஜயை சுழன்றடித்து கொண்டிருக்கிறதா, அரசியல் அலை? என்ற கேள்வி எழுந்துள்ளது.





