‘ஜனநாயகன்’ படத்துக்கு எதிராக புகார் அளித்த நபர்..!
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக்குழு கூறியுள்ளது. அரசியல் பக்கம் சாய்ந்துள்ள விஜயின் கடைசி படம் என்பதால், அவரது கட்சியினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், கடந்த மாதம் படத்தை தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
ஜனநாயகன் படத்திற்கு வேண்டும் என்றே தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என தவெக நிர்வாகிகள் செங்கோட்டையன், நிர்மல் குமார் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த நிலையில்தான் தணிக்கை சான்றிதழை விரைவில் வழங்க வலியுறுத்தி நீதிமன்ற படிகளை ஏறியுள்ளது ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ்.
கே.வி.என். புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், நீதிபதி பி.டி. ஆஷா முன்பு ஆஜராகி அவசர முறையீடு செய்தார். தணிக்கை வாரியம் முதலில் யுஏ சான்று வழங்குவதாகக் கூறியதாகவும் ஆனால், திடீரென தணிக்கை சான்று குறித்து முடிவெடுக்க மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி உள்ளதாகக் கூறியதாகவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பு குற்றஞ்சாட்டியது.
தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி பி.டி.ஆஷா, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்ததுடன் ஜனநாயகன் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக வந்த புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று மதியம் இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தணிக்கை குழுவில் இருக்கும் நபரே படத்தின் மீது புகார் கொடுத்தார்’ என தணிக்கை வாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி தரப்பில், ‘UA சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தணிக்கை வாரியம் தரப்பில், “பதில் மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும்” என கூறப்பட்டது. “மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்பட்டுள்ள புகார் நிலைக்கத்தக்கதல்ல” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




