மேற்கு ஆப்ரிக்காவின் சிறிய அமைதியான நகரம் டோரோப்போ. இதுவரை விவசாய நிலமாக மட்டுமே அறியப்பட்ட இந்த ஊர், இப்போது உலக நாடுகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியுள்ளது. காரணம், அந்த மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கும் சுமார் 100 டன்னுக்கும் அதிகமான (3.2 மில்லியன் அவுன்ஸ்) தங்கம்.
ஐவரி கோஸ்ட்டின் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்கு அடியில் ஒளிந்திருக்கும் இந்தத் தங்கத்தைக் கண்டுபிடித்தது ஏதோ சாதாரண மண்வெட்டி அல்ல. ரென்னெஸ் பல்கலைக்கழகத்தின் புவிசார் வல்லுநர் சியாக்னே தலைமையிலான குழு, செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வான்வழி கதிர்வீச்சு அளவீடுகளை (Airborne Gamma-ray Spectrometry) பயன்படுத்தி இந்த மர்மத்தைப் பூமிக்கு அடியில் இருந்து பிரித்தெடுத்துள்ளனர்.
இந்த மெகா திட்டத்தைச் செயல்படுத்த ‘ரெசொலூட் மைனிங்’ நிறுவனம் தயாராகிவிட்டது. சுமார் 500 மில்லியன் டாலர் (₹4,000 கோடிக்கும் மேல்) முதலீட்டில் இந்தச் சுரங்கம் அமைகிறது. ஏழ்மையான நிலையில் இருக்கும் புன்கானி மண்டலத்தில் 3,000 பேருக்கு நேரடி வேலை கிடைக்கப்போகிறது. மேலும் 10,000 பேருக்கு மறைமுக வாய்ப்புகள் உருவாகும். கட்டுமானப் பணிகள் தொடங்கி, அடுத்த 20 ஆண்டுகளுக்கு இங்கிருந்து தங்கம் வெட்டி எடுக்கப்படவுள்ளது.
ஐவரி கோஸ்ட் என்றாலே நமக்கு ‘கொக்கோ’ (Cocoa) தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்த நாடு இப்போது தனது பொருளாதாரத்தை மாற்றத் திட்டமிட்டுள்ளது. 2015-ல் வெறும் 24 டன்னாக இருந்த தங்க உற்பத்தி, 2023-ல் 51 டன்னாக உயர்ந்தது. 2030-க்குள் ஆண்டுக்கு 100 டன் தங்கம் என்ற இலக்கை எட்ட டோரோப்போ சுரங்கம் ஒரு முக்கியப் படிக்கட்டாக இருக்கும். எல்லாப் பெரிய திட்டங்களைப் போல இதிலும் சில சவால்கள் காத்திருக்கின்றன. இந்தச் சுரங்கம் புர்க்கினா பாசோ எல்லைக்கு மிக அருகில் உள்ளதால், பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பு அவசியமாகிறது.
தங்கம் பிரிக்க அதிக நீர் தேவைப்படும் என்பதால், நிலத்தடி நீர் மற்றும் அருகில் உள்ள ஆறுகள் மாசுபடாமல் இருப்பதை உறுதி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாரம்பரியமாகத் தங்கம் தோண்டிய சிறு முதலீட்டாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சுரங்கம் வெறும் தங்கத்தை மட்டும் எடுக்கப்போவதில்லை; மாறாக, அந்தப் பகுதிக்குத் தேவையான புதிய சாலைகள், மின்சாரம், பள்ளிகள் மற்றும் நவீன மருத்துவமனைகளையும் கொண்டு வரப்போகிறது. ஒரு சிறிய கிராமம், உலகத்தரம் வாய்ந்த தொழில் நகரமாக மாறப்போகும் அதிசயம் இப்போது டோரோப்போவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.






