தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்.!
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடக்கிறது. தவெக தலைவர் விஜய்க்கும் இதில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக 3 ஆவது நாளாக நடைபெற்ற விசாரணையில் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல்குமார் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகி நிர்மல்குமார், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக வீடியோ ஆதாரங்களை சிபிஐயிடம் ஒப்படைத்ததாக கூறினார். இதற்கிடையே, இந்த வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அதனை மறுத்த நிர்மல் குமார், விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதா கூறினார்.
இந்நிலையில் தான் தற்போது விஜய்க்கு கரூர் வழக்கு தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக டெல்லியில் வரும் 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் கோரி சம்மன் அனுப்பியுள்ளது.





