கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு..!
கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் கள ஆய்வு செய்கிறார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளுக்காக 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி வரும் 25 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். அன்றைய தினம் மாலை தொழில்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்கிறார். அப்போது, முதலமைச்சர் முன்னிலையில் பல தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
26 ஆம் தேதியன்று காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லானின் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை முதலமைச்சர் திறந்துவைக்கிறார். தொடர்ந்து தீரன் சின்னமலை மணிமண்டபத்திற்குச் என்று மரியாதை செலுத்த உள்ளார். சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் 605 கோடியில் முடிவுற்றப் பணிகளைத் தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதைத்தொடர்ந்து சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பால்வளத் தந்தை பரமசிவனின் திருவுருவச்சிலையினை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




