ஆந்திரா அருகே கரையை கடந்தது மொந்தா புயல்..!
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே மொந்தா புயல் கரையை கடந்தது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த திங்கட்கிழமை உருவான புயல் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே அதிகாலை கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
இதனால் ஆந்திராவின் கிருஷ்ணா, மசூலிபட்டினம் உள்ளிட்ட கடலோர் பகுதிகளில் இடி, மின்னலுடன் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன அல்லூரி மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மழை வெள்ளத்தால் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மொந்த புயல் ஆந்திராவில் கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.சென்னையை பொறுத்தவரையில் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழ்நாடு, புதுச்சேரியின் கடலோர பகுதிகள் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வரை வேகத்தில் தரைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.






