சென்னையில் 52 மெட்ரோ ரயில்களில் ‘ஆண்டி-டிராக்’ பாதுகாப்பு அம்சம்..!
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், முதல் கட்டத்தில் இயங்கும் 52 மெட்ரோ ரயில்களின் அனைத்து பெட்டிக கதவுகளிலும் ‘ஆண்டி-டிராக்’ பாதுகாப்பு அம்சத்தை நிறுவத் தயாராகி வருகிறது.
இதை நடைமுறைப்படுத்த, “முதல் கட்டத்தில் இயங்கும் 52 மெட்ரோ ரயில்களின் அனைத்து கதவுகளிலும் ‘ஆண்டி-டிராக்’ அம்சத்தை வடிவமைத்தல், வழங்குதல், நிறுவுதல், சோதித்தல் மற்றும் செயல்படுத்துதல்” ஆகியவற்றுக்கான ஒப்பந்தத்தை சி.எம்.ஆர்.எல் கையெழுத்திட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து ரூ. 48.33 கோடி ஆகும்.
இந்த ஒப்பந்தத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மனோஜ் கோயல் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன் (மெட்ரோ ரயில், சமிக்ஞை மற்றும் தொலைத் தொடர்பு) மற்றும் ஃபைவேலி டிரான்ஸ்போர்ட் ரயில் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவே நிறுவனத்தின் இயக்குநர் புனீத் மெஹ்ரோத்ரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் சி. பாலமுருகன் (மெட்ரோ ரயில்), சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
தற்போது, சி.எம்.ஆர்.எல்-லின் மெட்ரோ ரயில்களில் உள்ள தானியங்கி சறுக்கு கதவுகள் (automatic sliding doors), ரயில் நிலையங்களில் கதவுகள் மூடும்போது இடையில் சிக்கிக்கொள்ளும் பெரிய பொருட்களை அடையாளம் காணும் தடை கண்டறிதல் அமைப்பைக் கொண்டுள்ளன.
ஆனால், புதிய ‘ஆண்டி-டிராக் பயணிகள் கதவு பாதுகாப்பு அமைப்பு’ இதை விட மேம்பட்டது.பயணிகள் ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ கதவுகளுக்கு இடையில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ள சேலைகள், பை பட்டைகள் அல்லது பெல்ட்கள் போன்ற மெல்லிய பொருட்களையும் இது கண்டறியும்.
இந்த மேம்பட்ட அமைப்பு, எந்தவொரு ‘இழுவிசை’ அல்லது ‘இழுக்கும் சக்தி’ இருப்பதையும் கண்டறியும்.ஒரு நபர் அல்லது பொருள் கதவில் சிக்கிக்கொண்ட நிலையில், மெட்ரோ ரயில் நகரத் தொடங்கும் போது, அவ்வாறு சிக்கிய பொருள் இழுக்கப்பட்டால், இந்த அமைப்பு அதைக் கண்டறியும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது, மெட்ரோ ரயில் தானாகவே அவசரகால பிரேக்கை செயல்படுத்துவதுடன், மெட்ரோ ரயிலை உடனடியாக நிறுத்திவிடும். அதுமட்டுமின்றி இது மெட்ரோ ரயில் ஓட்டுநரின் பார்வைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் ஓட்டுநர் விரைவாகவும் உடனடியாகவும் நடவடிக்கை எடுக்க முடியும்.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இதுவரை கதவுகளில் சிக்கி விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், இந்த மேம்பாடு ஒரு செயலூக்கமான மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகும். இது பயணிகளின் பாதுகாப்பை, குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்றும் உலகத் தரத்திலான பாதுகாப்பு தரங்களை உறுதி செய்வதாகவும் சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது.
இந்த ‘ஆண்டி-டிராக்’ அம்சம், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக வாங்கப்படும் அனைத்து ரயில்களிலும் நிலையான ஏற்பாடாக இணைக்கப்படும் என்றும் சி.எம்.ஆர்.எல் மேலும் தெரிவித்துள்ளது.






