என்.டி.ஏ கூட்டணியிலிருந்து வெளியேறிய முடிவை திரும்ப பெற டிடிவி.தினகரனை வலியுறுத்தினேன் – அண்ணாமலை
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணையும்படி டிடிவி தினகரனை சந்தித்து அழைப்பு விடுத்திருப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரித்திர பிழையாகிவிடக் கூடாது என்பதற்காகவே தினகரனை சந்தித்து கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் சரத்குமார் இல்லத்திற்குச் சென்று, மறைந்த நடிகை ராதிகா சரத்குமாரின் தாயார் கீதா ராதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை தான் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் “நான் டி.டி.வி. தினகரனை சந்தித்தது உண்மைதான். நான் எப்போதும் வலியுறுத்தும் கருத்துகளைத்தான் அவரிடம் சொல்லி இருந்தேன்” என்று கூறினார். மேலும், “அரசியலில் சூழல் மாற அவர் மனம் மாறும் என்று நம்புகிறேன்” என்றும், “தேர்தல் களம் சூடுபிடிக்கும்போது நல்ல மாற்றங்கள் வரும் என்று நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார். தினகரன் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு வந்த பிறகு, தொலைபேசியில் தன்னை அழைத்துச் சந்தித்ததாகவும் அண்ணாமலை கூறினார்.
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி: “தி.மு.க. கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டும்தான் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றும், அதையே தினகரனிடம் வலியுறுத்தியதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். “டி.டி.வி. தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறியது அவருடைய கட்சியின் கருத்து. ஆனால், அவர் மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தாமல் இருக்க முடியாது. அதை நான் தவறிவிட்டால், அது சரித்திரத்தின் பிழையாக மாறிவிடும்” என்றார்.
மேலும் “என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை விரைவில் சந்திக்க இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்தை வரவேற்ற அண்ணாமலை, முதலமைச்சர் வெளிநாட்டிற்கு பயணம் செய்தது முதலீடுகளை ஈர்க்கவா அல்லது வெளிநாடுகளில் முதலீடு செய்யவா என விஜய் விமர்சித்தது சரி தான் என்றும் கூறினார்.
“விஜய்க்குத் தொண்டை குழி இருக்கிறது, வாய் இருக்கிறது, அவர் கருத்தை அவர் தெரிவிப்பார்” என்றார். மேலும், “எதிரான கருத்து வந்தால் உடனடியாக பா.ஜ.க. ‘பி டீம்’ என்று சொல்வதை நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். முதல்வரின் துபாய் பயணத்தின்போது ஆடிட்டரை தனி ஜெட்டில் அழைத்துச் சென்றது ஏன், அவரது குடும்பத்தினர் முன்னதாகச் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பயணங்களின் ஆதார அடிப்படையிலான வெள்ளையறிக்கையை பா.ஜ.க. கேட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
சபாநாயகர் அப்பாவு, விஜய் பா.ஜ.க.வின் ‘பி டீம்’ என்று கூறியதற்கு அண்ணாமலை பதிலளித்தார். “கடந்த காலங்களில் சபாநாயகர் அப்பாவு, கலைஞர் கருணாநிதியையே தவறாகப் பேசியவர். இந்தியாவிலேயே ஒரு சபாநாயகர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு அவர் எடுத்துக்காட்டாக இருக்கிறார்” என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.
நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தது குறித்த கேள்விக்கு அண்ணாமலை, “ரஜினியை நான் மாதத்திற்கு ஒருமுறை சந்திப்பேன். அவர் எனக்கு ஒரு குரு” என்று கூறினார். சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் இந்தச் சந்திப்புகள் நடைபெறுவதாகவும், ஆன்மிகம் மற்றும் யோகா போன்ற விஷயங்கள் குறித்து தாங்கள் பேசுவதாகவும் தெரிவித்தார். “தயவுசெய்து இதனை அரசியல் படுத்தாதீர்கள்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.






