வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் இருந்து பணியாற்ற வேண்டும்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளைச் சேர்க்கவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு கடுமையாகப் பாடுபடவும் தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இன்று (செப்டம்பர் 23, 2025) சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தற்போது நடைபெற்று வரும் “உங்களுடன் ஸ்டாலின்” மற்றும் “நலம் காக்கும் ஸ்டாலின்” போன்ற மக்கள் சந்திப்பு முகாம்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட மகளிரைச் சேர்த்திடும் வகையில் இந்தப் புதிய முகாம்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்துக் கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தினார்.
அதேபோல நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களைத் தவிர்த்து, குறைந்தது வாரத்தில் நான்கு நாட்கள் தங்களது தொகுதியில் தங்கி, மக்களைச் சந்தித்து அவர்களுக்கான பணிகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் தாங்கள் ஆற்றிய மக்கள் பணிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு நலனுக்காகக் குரல் கொடுத்தது பற்றிய அறிக்கையை, 15 நாட்களுக்கு ஒருமுறை தனக்கு அளித்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளையும் வென்று சாதனை படைத்தது. இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அரும்பாடுபட்டனர். அதேபோல், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்குக் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
அமைச்சர் பெருமக்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கழகப் பணியாற்றி, தேர்தல் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.






