கூவத்தூரில் நடந்தது என்ன? – டிடிவி தினகரன்
தன்மானம் தான் முக்கியம் என்றால் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்று எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், “நன்றி மறப்பது நன்றன்று” என்று பேசுவது, “சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சு, தமிழக மக்களையும், மற்ற கட்சிகளையும் முட்டாள்கள் என நினைப்பதாக தினகரன் குற்றம்சாட்டினார். “நன்றியைப் பற்றிப் பேச பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை. துரோகத்தைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. 122 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் பழனிசாமியின் ஆட்சியைக் காப்பாற்றினார்கள்; பா.ஜ.க. இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
18 சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று மனு அளிக்கவில்லை என்றும், பழனிசாமியை முதலமைச்சர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்றுதான் மனு அளித்ததாகவும் அவர் கூறினார். “அம்மாவின் ஆட்சியில் இருந்து பழனிசாமியின் ஆட்சி விலகிச் செல்வதால் தான் அவ்வாறு செய்தோம். வாக்கெடுப்பின் போது பழனிசாமியை காப்பாற்றியது சட்டமன்ற உறுப்பினர்கள்தான், பா.ஜ.க அல்ல” என்று டிடிவி தினகரன் கூறினார்.
“கூவத்தூரில் சசிகலாவிடம், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்ல வேண்டாம். யாரும் கையெழுத்து போட மாட்டார்கள் என பழனிச்சாமி தெரிவித்தார். வாக்கெடுப்பின் போது 122 எம்எல்ஏக்களில் எத்தனை பேர் பிச்சுக்கொண்டு போக இருந்தார்கள். அவர்களை யார் தடுத்து நிறுத்தியது? செம்மலை எல்லாம் தாண்டி குதித்து ஓடினார்; பழனிச்சாமி என்றால் நாங்கள் இருக்க மாட்டோம் என்றார். அப்போது வாக்கெடுப்பின் போது அவரை காப்பாற்றியது யார்?” என கேள்வி எழுப்பினார்.
“கட்சியிலிருந்து என்னை நீக்கிய போது, டெல்லி சொன்னதால் தான் நீக்கியதாக பழனிச்சாமி தெரிவித்தார். டிடிவி தினகரன் இருந்தால் ஆட்சி போய்விடும். அதனால் அவரை நீக்க வேண்டும் என டெல்லியை கூறியதாக அவர் தெரிவித்தார். இவரே கட்சியை விட்டு நீக்கி விட்டு பொய் கூறினார் என குற்றம்சாட்டிய டிடிவி தினகரன், “ஆட்சியைக் காப்பாற்ற 18 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தது பழனிச்சாமி. எனவே நன்றிக்கு அவருக்கும் சம்பந்தம் இல்லை” என்றும் அவர் விமர்சித்தார்.
“தி.மு.க.விற்கு மிகப்பெரிய பிளஸ், எடப்பாடி பழனிசாமிதான்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதைச் சுட்டிக்காட்டிய தினகரன், “உதயநிதி உண்மையைத்தான் பேசியுள்ளார். துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், பா.ஜ.க.வின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், தங்கள் பாதை தனிப்பாதை என்றும், இனிமேல் அமையும் கூட்டணிதான் ஆட்சியில் அமரும் கூட்டணி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். செங்கோட்டையன் நீக்கப்பட்டது குறித்த கேள்விகளுக்கு, அது அரசியல் காரணம் இல்லை என்றும், வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக ஜெயலலிதா அவரை நீக்கியிருந்தார் என்றும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் முரண்பட்ட பேச்சுக்கள், அவரது தோல்வி பயத்தைக் காட்டுவதாக தினகரன் கூறினார். “2026 தேர்தலில் பழனிசாமி நடுரோட்டில் நிற்பார். அப்போது அவரை நாங்கள் தான் காப்பாற்ற வருவோம். பழனிசாமியின் செயல்பாடுகள் தி.மு.க.வுக்குதான் சாதகமாக உள்ளது. அரசியல் தெரிந்த அனைவருக்கும் இது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும்” என்று தினகரன் ஆவேசமாகப் பேசினார்.
மேலும், பழனிசாமி “பிரமாண்டமான கூட்டணி வரப்போகிறது” என்று கூறுவதைச் சாடிய தினகரன், “இலங்கையிலிருந்து ஏதாவது கட்சி வரப்போகிறதா என்று தெரியவில்லை. பழனிசாமி யாரையெல்லாம் சந்திக்கிறார் என்பது உலகத்துக்கே தெரியும்” என்றார்.
“2026 இல் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், எது சரியோ அதை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்ட டிடிவி தினகரன், “இல்லையென்றால் 2026-ல் பழனிச்சாமி நடுரோட்டில் நிற்பார். அப்போது காப்பாற்ற நாங்கள்தான் வருவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.






