--- --:--:-- --

தமிழகத்தில் தவெக ஜெயிக்குமா? திமுக, அதிமுகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? வெளியான புதிய கருத்துக் கணிப்பால் ‘ஷாக்’!

13

தேர்தலில் தமிழக மக்களின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது? திமுக- அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்? தவெகவின் விஜய் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது குறித்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி, அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்தியா டுடே நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் மோடி, ஸ்டாலின் செல்வாக்கு சற்று குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாருங்கள், கருத்துக் கணிப்பின் முடிவுகள் என்ன சொல்கின்றன, அது என்ன மாதிரியான விளைவுகளை தரும் என்று விரிவாகப் பார்க்கலாம்.

 

வரும் 2026இல் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல், மேற்கு வங்காளம், பீகார் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. சட்டசபை தேர்தல் பிரசாரங்களை பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொடங்கிவிட்டனர்.

 

கடந்த வாரம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதேபோல், வாக்கு திருட்டு என்ற ஆயுதத்தை எடுத்து, பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை பீஹாரில் இருந்து தொடங்கி இருக்கிறது. பிஹாரில் இப்போது ராகுல் காந்தி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் கூட இதில் கலந்து கொண்டனர்.

 

தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமகவின் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், பாஜக தேசிய தலைவர்களான பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழகம் வந்து, பாஜக- அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

 

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கி உள்ள நிலையில், பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே, Mood of the Nation என்ற பெயரில் கருத்து கணிப்பை, சி வோட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தி உள்ளது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்த கருத்துக் கணிப்பும் கடந்த பிப்ரவரி மாத கருத்து கணிப்புடன் ஒப்பீடு செய்து, வெளியிட்டுள்ளனர். பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்துக் கணிப்பில், பாஜக மட்டும் தனித்து 281 இடங்களைப் பிடிக்கும் என்றும், எதிர்க்கட்சிகள் 184 இடங்களை வெல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி மட்டும் 78 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இப்போது வெளியாகி இருக்கும் கருத்து கணிப்பில் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு செல்வாக்கு சற்று குறைந்துள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. அதாவது இப்போது தேர்தல் நடந்தால், பாஜகக்கு முன்பு கிடைக்கும் என்று கணிக்கப்பட்ட 281 என்ற இடங்கள், தற்போது 260 இடங்களாக குறையும் என்கிறது கருத்து கணிப்பு.

 

கடந்த பிப்ரவரி மாதம், எதிர்க்கட்சிகளுக்கு 184 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 186 இடங்களாக கூடியுள்ளது; இதில் காங்கிரஸுக்கு பிப்ரவரி மாதம் 78 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 97 இடங்களாக அதிகரித்துள்ளதாக, இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

 

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்த மக்களின் மன நிலையையும் இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சி திருப்திகரம் என்று பிப்ரவரி மாதம் கருத்து சொன்னவர்கள் 62%; சரியில்லை என்று 21% பேர் கூறியிருந்தனர். ஆகஸ்ட் மாத கருத்து கணிப்பில், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திருப்திகரம் என்றவர்களின் சதவிகிதம் 62இல் இருந்து 58 சதவிகிதமாக சரிந்துள்ளது. மோடியின் செயல்பாடுகள் சரியில்லை என்று சொன்னவர்களின் விகிதம், 21இல் இருந்து 26 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

 

மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளுக்கான மதிப்பீடும் குறைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் 62.1 சதவிகிதம் பேர், மோடி அரசின் செயல்பாடுகளுக்கு நன்று என மதிப்பிட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இது 54.2 சதவிகிதம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல்பாடுகளை பாராட்டி உள்ளனர். அதாவது மத்திய அரசு மீதான மக்களின் அதிருப்தி 8.6 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

 

தேசிய அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மாநிலம் பீகார். இங்கு தற்போது யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, வாக்கு திருட்டு நடந்துள்ளதாகக்கூறி, தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

 

ஆனால், பீகாரின் நிலைமை என்னவோ பாஜக அணிக்கு சாதகமாக இருக்கும் என்று இந்தியா டுடே கருத்து கணிப்பு தெரிவிக்கிறது 2024 தேர்தலில் என்டிஏ 47% வாக்குகளை பெற்றிருந்தது. இப்போது அது 50% ஆக உயர வாய்ப்புள்ளதாக கணிப்பு தெரிவிக்கிறது.

 

எனினும், பீகாரில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் கொஞ்சம் அதிகரித்துள்ளது, அந்த கட்சிக்கு ஆறுதலை தரும். 2024 இல் 39% வாக்குகளை பெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு, தற்போது 44% வரை உயர்ந்துள்ளது. ஆனால், தொகுதிகளை கைப்பற்றும் அளவுக்கு இது போதுமானதாக இல்லை என்கிறது கருத்து கணிப்பு.

 

கடந்த 2024 இல் என்டிஏ 30 இடங்களை கைப்பற்றியது. தற்போதைய கணிப்பில் என்டிஏ 30 முதல் 32 இடங்கள் வரை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை அது 8 இடங்களுக்கு குறையக்கூடும் என்று கணிப்பு கூறுகிறது.

 

அதெல்லாம் சரி, தமிழக வாக்காளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நீங்கள் ஆவலுடன் இருப்பது புரிகிறது. வாருங்கள்… தமிழக வாக்காளர் மனநிலை என்னவென்று இந்தியா டுடே சொல்கிறது என்று பார்ப்போம்.

 

இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் தமிழகத்தில் யார் கை ஓங்கி இருக்கும் என்ற விவரத்தை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில், தற்போது நடைபெற்றால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 36 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இந்தியா டுடோ- சி வோட்டர்ஸ் கருத்து கணிப்பு.

இது கடந்த பிப்ரவரியில் இந்தியா டுடே கணித்திருத்திருந்த எண்ணிகையுடன் ஒப்பிட்டு பார்த்தால், திமுகவுக்கு இம்முறை 3 தொகுதிகள் குறையும் என்று சொல்கிறது இந்தியா டுடே. பிப்ரவரியில் இந்தியா டுடே வெளியிட்டிருந்த கருத்துக் கணிப்பு, 39 தொகுதிகளையும் திமுக அணியே வெல்லும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இப்போது தமிழகத்தில் தேர்தல் நடந்தால், அதிமுக- பாஜக அணி 3 தொகுதிகளை கைப்பற்றும் உள்ளதாக கணித்துள்ளது இந்தியா டுடே. அதெல்லாம் சரி, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக, தமிழகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?

 

இது தொடர்பாக இந்தியா டுடே கருத்து கணிப்பு கூறுகையில், திமுகவுக்கு எதிரான வாக்குகளையே தவெக பிரிக்கும் என்கிறது. விஜயின் வரவு திமுகவுக்கே சாதகம் என்றும் அது தெரிவித்துள்ளது. எனினும், 39 தொகுதிகளில் ஒரு தொகுதியைக்கூட தவெக கைப்பற்றும் என்று இந்தியா டுடே குறிப்பிடவில்லை.

 

சி வோட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா டுடே நடத்தியுள்ள இந்த கருத்துக்கணிப்பு, தமிழக அரசியல் களத்தில் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தனக்கு செல்வாக்கு சற்று குறைந்துள்ளதே என்று திமுக தலைமை கவலையில் உள்ளது; அதேபோல், 3 தொகுதிகள் தான் கிடைக்கும் என்ற கணிப்பு, அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

 

எனவே, தற்போது வெளியாகி இருக்கும் கருத்து கணிப்பின் அடிப்படையில், அரசியல் கட்சிகள் குறிப்பாக எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணி வியூகங்களை மாற்ற வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon