--- --:--:-- --

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளிநாடு பயணம்..!

1

வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் ஒருவாரம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டு பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

இதற்காக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வெளிநாடுகளிலும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, அதில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழிலதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார்.

 

அந்த வகையில், இதுவரை 4 வெளிநாட்டு பயணங்களை முதலமைச்சர், மேற்கொண்டுள்ள நிலையில் 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டுகளை ஈர்க்க முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

 

இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் முதலமைச்சர் இரவு 9 மணி அளவில் ஜெர்மனி சென்றடைகிறார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஜெர்மனியில் நடைபெறும் ஐரோப்பாவில் மாபெரும் தமிழ் கனவு – 2025 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். செப்டம்பர் 1ம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 2ம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

 

செப்டம்பர் 3ம் தேதி தேதி லண்டனில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார். செப்டம்பர் 4ஆம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியம் சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்கிறார்.

 

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்துவைக்க இருப்பதாக கூறினார். முதலமைச்சரின் இந்த பயணத்தின்போது பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 7ம் தேதி லண்டனில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மறுநாள் அதிகாலை சென்னை வந்தடைகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon