உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. வெளுக்கப்போகும் கனமழை!
தமிழ்நாட்டில் இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இது நாளை (25 ஆம் தேதி) வாக்கில், ஒரிசா – மேற்கு வங்காள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் மத்தியமேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத் – வடக்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சென்னையில் வெயில் குறைவாகவே இருக்கும் எனவும், மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாளை வங்கக்கடலில் ஒடிசா மற்றும் மேற்குவங்க கடல்பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனபதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.





