அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா பேசி வரும் நிலையில், அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்து வந்தாலும், அவர்கள் தேர்தலில் வென்றால் அதிமுக ஆட்சியா? அல்லது கூட்டணி ஆட்சியா? என்கிற கேள்வி விடை தெரியாமல் நீண்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் பாஜக தலைவர்களை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.
சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். அதன் பிறகு, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூட்டணி ஆட்சி என்பதை இருமுறை உறுதியாக குறிப்பிட்ட அமித் ஷா, 2026-இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தால் அந்த அமைச்சரவையில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என தெரிவித்திருந்தார்.
ஆனால், இதற்கு பதில் அளித்த, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற அர்த்தத்திலேயே அமித் ஷா கூறியதாகவும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில் நேற்று முன்தினம் நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என திட்டவட்டமாக கூறியது மீண்டும் விவாதத்திற்கு வித்திட்டது.
இந்த நிலையில், நேற்று திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, 2026-இல் அதிமுக வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமைந்து 4 மாதங்களை கடந்த பிறகும், வெற்றி பெற்றால் ஆட்சி எப்படி இருக்கும் என்பதில் இரு கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து எதிரும் புதிருமாக பேசி வருவதால், கேள்விக்கு விடை கிடைக்காமல் விவாதம் நீண்டு கொண்டே செல்கிறது.






