மதுரை தவெக மாநாடு – திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர கொடிக் கம்பம்
மதுரை தவெக மாநாட்டு திடலில் கிரேன் உதவியுடன் நிறுவும்போது, 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
சுமார் 500 ஏக்கரில் மாநாட்டு திடல், 2 பார்க்கிங் இடங்கள், ஒன்றரை லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள் என ஏராளமான வசதிகளை அக்கட்சி மேலாண்மை குழு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாநாட்டின் தொடக்கமாக கட்சி கொடியை விஜய் ஏற்ற திட்டமிடப்பட்டிருந்ததால், அதற்காக 100 அடி கொடிகம்பத்தை நடும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராட்சத கிரேன் மூலம் கொடிக்கம்பம் நடப்பட்டபோது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்து விபத்தானது. இதனால் அருகே இருந்தவர்கள் தெறித்து ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிவேகமாக சாய்ந்த அந்த பிரம்மாண்ட கொடிக்கம்பம் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரின் மீது விழுந்ததால் கார் கண்ணாடிகள் உடைந்து உருக்குலைந்தது. இதையடுத்து கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
நல்வாய்ப்பாக அந்த காரில் யாரும் இல்லாத நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கொடிகம்பத்தை நிலைநிறுத்தும் போல்ட்டுகளை சரியாக பொறுத்தாதததால் சாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




