50 ஆண்டுகால திரைப்பயணத்தை வாழ்த்திய பிரபலங்கள்..!
தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி நேற்று வெளிவந்துள்ள அவரது கூலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரஜினிகாந்த் திரையுலகில் பொன்விழா கொண்டாடுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன் லால் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள பதிவில் பின்வருமாறு கூறியுள்ளார்.
அனைவருக்கும் 79 ஆவது சுதந்திர தின வாழ்த்துகள். என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே நேற்று வெளியான ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு கலவை விமர்சனங்கள் கிடைத்தாலும் படத்தின் மீதான அதிக எதிர்பார்ப்பு காரணமாக திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை கூலி திரைப்படம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியில் சாதனை படைத்துள்ள நிலையில் ஜெயிலர் 2 திரைப்படும் மிகுந்த வரவேற்பை பெறும் என்கிற எதிர்பார்ப்பில் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.






