தேர்தலில் தனியாகத்தான் போட்டியிடுவேன் – நாதக சீமான் உறுதி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “செத்து சாம்பலாகக் கூட ஆவேனே தவிர தேர்தலில் தனியாகத்தான் போட்டியிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அரசியல் கட்சியினர் தீவிரமாகச் செய்துவருகின்றனர்.
திமுக அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் மும்முரமாக செயல்பட்டுவருகிறது. எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் தலைப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இதில், தினமும் மக்களைச் சந்தித்து வரும் அவர், பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.
பாமக தலைவர் அன்புமணியும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடைபயணம் துவங்கியுள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தற்போது, திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. திமுகவை பொறுத்தவரை தற்போதுள்ள கூட்டணி அப்படியே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் ஏற்கனவே இருந்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
தவெகவை பொறுத்தவரை விஜய் தான் முதல்வர் வேட்பாளர் எனத் தற்போதே அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதன் காரணமாக தவெக தனித்து களம் காண்கிறதா அல்லது வேறேதும் கட்சிகள் கூட்டணி வைக்கின்றனவா என்பதும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. இதனால், தற்போதைக்கு தவெக தனி அணியாக தேர்தலை சந்திக்க இருக்கிறது. கூட்டணி அமைத்தாலும் தவெகவே தலைமை தாங்கும் எனும் நிலைப்பாடே நிலவுகிறது.





