போராடும் தூய்மைப் பணி தொழிலாளர்கள்.. தவெக தலைவர் விஜய் சந்திப்பு!
சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணி தொழிலாளர்களுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16 ஆம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடத்தி வருபவர்களுடன் அரசு தரப்பில் இருந்து ஏழு கட்ட பேச்சுவார்த்தைகள் இதுவரை நடந்துள்ளன.
ஆனால், இதுவரை இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லை. எனவே தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். போராட்டம் நடத்திவரும் தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் போராட்ட களத்திற்கு நேரில் சென்று அவர்களைச் சந்தித்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணி தொழிலாளர்களை தவெக தலைவர் விஜய் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களைச் சந்தித்து, பேசிவருகிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.





