--- --:--:-- --

தி.மு.க ஆட்சி முடிவில் ரூ.10 லட்சம் கோடி கடன்!

7

மிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு (ஆகஸ்ட் 2021) அந்த அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில நிதிய நிலை குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில், நிர்வாகத்தில் இருந்த கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக நிதிநிலைமை “மோசமாக” இருப்பதாகவும், “தற்காப்பு கையிருப்பு ஏதுமில்லை” என்றும் கூறப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி செய்ததது.

 

தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முதல்வராகப் பதவியேற்ற கட்சியின் தலைவர் சி. ஜோசப் விஜய், திமுக அரசு தமிழகத்தை 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் “மோசமான நிலையில்” விட்டுச் சென்றுள்ளதாகவும், தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை விரைவில் வெளியிடப்போவதாகத் தெரிவித்தார். அதே சமயம், வீட்டு உபயோக நுகர்வோருக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார்.

 

 

மாநில மின்சாரத் துறையின் உத்தரவுப்படி, இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ஆண்டுக்கு 1,730 கோடி ரூபாய் செலவாகும். விஜயின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்,, மாநில கருவூலம் காலியாகிவிட்டது என்ற கருத்தை நிராகரித்தார். “நடைமுறைக்குச் சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த நீங்கள், இப்போதுதான் அரசு நிர்வாகத்தில் காலடி எடுத்து வைக்கிறீர்கள். எங்களைப் போலவே, மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற நுணுக்கங்களை நீங்களும் விரைவில் கற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

 

 

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய தரவுகளின்படி, தமிழகத்தின் நிதி நிலைமை அத்தனை சிறப்பாக இல்லை. 2025 நிதியாண்டின் இறுதியில், மாநிலத்தின் மொத்தக் கடன் 9.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். அதே நேரத்தில், 2011-12 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட பழைய ஜிடிபி தொடரின்படி, 2025 நிதியாண்டில் 11.2% மற்றும் 2026 நிதியாண்டில் 10.8% உண்மையான வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து, நாட்டின் மிக வேகமாக வளரும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. வேகமாக வளரும் மாநிலங்களுக்கு அதிக கடன் வாங்கும் வசதி உண்டு, ஏனெனில் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் அவற்றுக்கு அதிகமாக இருக்கும்.

 

 

தமிழகத்தின் மொத்தக் கடன், மாநில ஜிடிபியில் 2025 நிதியாண்டில் 30.6% ஆக இருந்தது. இது 2022-இல் 32.2% ஆக இருந்து, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது. முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ல் 26.5% ஆக இருந்த கடன், 2021-ல் 31.8% ஆகக் கடுமையாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 2021-ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலேயே தமிழகத்தின் நிதிநிலை ஆபத்தான நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி இருந்தது. அனைத்து மாநிலங்களிலும் சந்தையில் இருந்து அதிக கடன் வாங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தது.

 

 

விஜய் குறிப்பிட்ட 10 லட்சம் கோடி ரூபாய் கடன் என்பது முந்தைய ஒரு அரசின் செயல் மட்டுமல்ல, அதற்கு முன்னால் இருந்த அரசுகளின் செயல்பாடுகளும் சேர்ந்ததே ஆகும். 16-வது நிதி ஆணையத்தின் சமீபத்திய அறிக்கையும் இதையே சுட்டிக்காட்டுகிறது. 2012 நிதியாண்டு வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்கள் அல்லாத பிற மாநிலங்களில், மிகக் குறைந்த கடன்-ஜிடிபி விகிதத்தில் தமிழகம் 2வது இடத்தில் இருந்தது. 2020 நிதியாண்டு இந்த விகிதம் படிப்படியாக உயர்ந்து 24.7% ஆனது. 2021 நிதியாண்டு 31% ஆக உயர்ந்தது.

 

Leave a Reply

Right Menu Icon