--- --:--:-- --

திருச்சி பஞ்சப்பூரில் பிரம்மாண்ட செல்போன் டவர்!

3

திருச்சி பஞ்சப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் விரைவில் பிரம்மாண்டமான செல்போன் டவர் அமைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதற்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

 

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற செட்டிநாடு வணிக சந்தை கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். புதிதாக திறக்கப்பட்ட பஞ்சப்பூர் கலைஞர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பிரம்மாண்டமான செல்போன் டவர் அமைக்க பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் பேசப்பட்டு வருவதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

 

சென்னையில் நடைபெற்று வரும் துப்புரவுப் பணியாளர்களின் போராட்டக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதற்குத் தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மழைநீர் வடிகால் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றும், முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரடியாக இதனை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும், வாய்க்கால்களில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 

பஞ்சப்பூரிலிருந்து குடமுருட்டி வரை ரூ.180 கோடியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நில ஆர்ஜிதப் பணிகள் ரூ.40 கோடியில் நடைபெற்று வருகின்றன. நில ஆர்ஜிதம் இல்லாமலேயே பணிகளை மேற்கொள்ள முடியுமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

 

போலி வாக்காளர்களைச் சேர்க்காமல் இருக்க மிக கவனமாக இருப்பதாகவும், தலைமை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் நேரு கூறினார். குறிப்பாக, வட இந்தியாவில் இருந்து பணிக்கு வந்தவர்கள் மற்றும் நிரந்தர முகவரி இல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியாது என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

திருச்சி மணப்பாறை சிப்காட்டில் புதிய தொழிற்சாலை ஒன்று அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மாநகராட்சி மேயர் அன்பழகன் உடன் இருந்தார்.

Right Menu Icon