திமுக தலைவரைச் சந்தித்த முதலமைச்சர் விஜய்
சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வென்று தனி பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான 118-ஐ அக்கட்சியால் நெருங்க முடியவில்லை. இதனால், அக்கட்சி ஆட்சி அமைக்கவும் முடியாமல், அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கவும் முடியாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது தவெக.
அதன்படி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரியது தவெக. இதனை ஏற்ற காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்தது. இதேபோல், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவை நிபந்தனையின்றி, வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன. இதன் காரணமாக நேற்று (10ஆம் தேதி) தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழ்நாட்டில் புதிய அரசை அமைத்தார். இதனைத் தொடர்ந்து தனது மூன்று திட்டங்களில் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, சட்ட ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் முதலமைச்சர் விஜய், தனது கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாரின் நினைவிடம் சென்று அங்கு மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இதனைத் தொடர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகரனை தேர்வு செய்து அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினைச் சந்திக்க அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் விஜய்யை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார். தொடர்ந்து வீட்டினுள் சென்ற முதலமைச்சர் விஜய்யை, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார். தொடர்ந்து இருவரும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.





