டிஎஸ்பி சுந்தரேசன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ஏன்?
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில், 6 காரணங்களை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கார் வாகனம் பறிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே பணிக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
தன்னுடைய வாகனத்தை எஸ்.பி. அலுவலகத்தினர் வாங்கிக் கொண்டதாக மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும் எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேரிடம் தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இதற்கான உத்தரவில், 6 காரணங்களை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, அரசு ஊழியருக்கான விதிகளை மீறி, உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் ஊடகங்களை சந்தித்ததாகவும், உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவிஐபி பந்தோபஸ்துக்காக மாவட்டம் முழுவதும் 44 வாகனங்களை பயன்படுத்திய நிலையில், தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மட்டும் திரும்ப பெற்றதாக ஊடகங்கள் முன் சித்தரித்து கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தனக்கு கீழ் பணியாற்றிய பெண் ஆய்வாளரை மிரட்டி அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும், டிஎஸ்பி அலுவலகத்தில் ஏசி மற்றும் பிரிண்டர் பொருத்துவதற்கு உதவி ஆய்வாளரிடம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஎஸ்பி என்கிற பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு, தனது அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளதோடு, பல நேரங்களில் ஒழுக்கமின்மையை வெளிப்படுத்தி உள்ளதால் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





