சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன்..!
கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க ஆந்திர எல்லையில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அதே பகுதியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 12 ஆம் தேதி பள்ளி முடிந்து ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்து, மாந்தோப்பு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக சிறுமியைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர், வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தரையிலிருந்த மண்ணை வாரி மர்ம நபரின் முகத்தில் தூவிவிட்டு தப்பி ஓடிய சிறுமி, ஆடைகள் கிழிந்து முகத்தில் காயங்களுடன் வீட்டிற்கு வந்ததைக் கண்டு அவரது பெற்றோர் உடைந்தே போனார்கள்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை கும்மிடிப்பூண்டி எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 7 நாட்களாகியும் இதுவரை குற்றவாளியைக் கைது செய்யவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சம்பவத்தில் ஈடுபட்டவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாயும் அவர் பிடிபடாமல் இருப்பது போலீசாருக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், இது தொடர்பான புகாரில் போக்சோ வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், சிறுமி கடத்தப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றை வைத்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குற்றவாளியைப் பிடிக்க ஆந்திராவுக்கு விரைந்த காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை, தடா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குற்றவாளியை வலைவீசித் தேடி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் ஆந்திர எல்லையில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.





