வரதட்சணைக்காக நடந்த கொடுமை..மதுரை ஆசிரியைக்கு ICU-வில் சிகிச்சை!
மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவலர்களான பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் செந்தில்குமரன். இவரது மகன் பூபாலன் மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
பூபாலனுக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகனும், ஐந்து வயதில் ஒரு மகளும் உள்ளனர்.தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் தங்கப்பிரியா, தனது போலீஸ்கார கணவர் பூபாலன், காவல் ஆய்வாளரான மாமனார் செந்தில்குமரன் மற்றும் நாத்தனார் அனிதா ஆகியோர் மீது வரதட்சணைக் கொடுமை புகார் கொடுத்திருக்கிறார்.
திருமணத்தின் போது 60 சவரன் நகைகள், புல்லட் பைக் மற்றும் சீர்வரிசைப் பொருள்கள் கொடுத்ததாகவும், தற்போது மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்து இருக்கிறார்.பல லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டித் தர வேண்டும், நகை கூடுதலாக வேண்டும் என வற்புறுத்தி தினமும் கொடுமைப்படுத்துகின்றனர். கணவருக்கும், எனக்கும் சண்டை ஏற்படுவதற்கு அவரது குடும்பத்தினர் முக்கிய காரணமாக இருப்பதாகவும் தங்கப்பிரியா குற்றம் சாட்டியுள்ளார்.
கூடுதல் வரதட்சணை கேட்டு தங்கப்பிரியாவை கணவர் பூபாலன் தாக்கியதாகவும், அறையில் தனியாக அடைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.தொடர் தாக்குதலில் காயம் அடைந்த ஆசிரியை தங்கப்பிரியா, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கப்பிரியா மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் அளித்த வரதட்சணை புகாரின் பேரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் தலைமறைவாகி விட்ட நிலையில் அவர்களைக் கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி பாலசுந்தரம் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனிடையே மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் உத்தரவிட்டதன் பேரில், வரதட்சணைக் கொடுமை வழக்கில் சிக்கியுள்ள காவலர் பூபாலன் மற்றும் காவல் ஆய்வாளர் செந்தில்குமரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரதட்சணைக் கொடுமையால் திருப்பூர் ரித்தன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது ஆசிரியை ஒருவரும் வரதட்சணைக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






