வெற்றிமாறனின் பேட் கேர்ள் பட டீசரை நீக்க நீதிமன்றம் உத்தரவு..!
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கத்தில் அஞ்சலி சிவராமன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பேட் கேர்ள்.
அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இதனைத் தயாரித்துள்ளனர். சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்ற இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று வெளியானது.
பள்ளிப்பருவ எதிர்பாலின ஈர்ப்பு, டீன் ஏஜ் பெண்களின் மனச் சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து உரையாடும் விதமாக அமைந்திருந்த அந்த டீசர் ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது.பள்ளிப்பருவ காதலை ஊக்குவிக்கும் விதமாகவும், குறிப்பிட்ட சமூகப் பெண்கள் குறித்து தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள் உள்ளதாகவும் ஒருபுறம் புகார் எழுந்த நிலையில், வெறும் டீசரை வைத்து ஒரு படத்தை முடிவு செய்யக் கூடாது என இப்படத்துக்கு ஆதரவுக் குரல்களும் எழுந்தன.
இப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழே வழங்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், அவற்றையெல்லாம் கடந்து யூஏ சான்றிதழ் பெற்ற இப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது புதிய சர்ச்சையில் இப்படம் சிக்கியுள்ளது. சங்கரன்கோவிலைச் சேர்ந்த ராம்குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், டீசரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும், இது பாலியல் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி, தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிமன்றம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து பேட் கேர்ள் படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உத்தரவு நகல் கிடைத்த ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வரும் காலங்களில் இதுபோன்ற பதிவேற்றங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.
அத்துடன், தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மனுதாரர் தனியாக உரிய அமைப்பிடம் மனு அளிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இதனால் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





