ஈபிஎஸ், அண்ணாமலையை ஒருமையில் பேசி கிண்டல் செய்த ஆதவ் அர்ஜுனா
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை த.வெ.க-வின் ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாரில்லை என்று த.வெ.க தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கிண்டலாகக் குறிப்பிடும் காணொளி இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக, தனியார் விடுதியில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, இருவரும் உரையாடிய போது பாஜகவே அதிமுகவை கூட்டணியில் இருந்து விலக்கிவிடும் என்றும், எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணி வைக்க முன்வரவில்லை என்றும் சிரிப்புடன் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டார்.
அதிமுக, த.வெ.க கூட்டணி குறித்து முன்னர் பேச்சு நிலவியது. ஆனால், பாஜக-அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டது. இருப்பினும் அந்தக் கூட்டணிக்குள் த.வெ.க-வை இணைத்துவிட முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் குறிப்பிட்டது பேசுபொருளாகியுள்ளது.





