--- --:--:-- --

ராமதாஸின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..!

3

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அக்கட்சியின் தலைவரும், தனது மகனுமான அன்புமணி மீது அடுக்கடுக்காய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது பாமகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாமக இளைஞரணித் தலைவராக முகுந்தனை நியமிக்க முடிவானதில் இருந்தே ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தச் சம்பவத்தின்போதே அன்புமணி, தான் தனியாக பனையூரில் அலுவலகம் அமைத்திருப்பதாகவும், அங்கு வந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் தன்னைச் சந்திக்கலாம் எனவும் அறிவித்தார்.

 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி இருவருக்கும் இடையே சமரசம் பேசி சலசலப்புகளை அடக்கினார்.குறிப்பாக பாமக தலைமைப் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாகவும், இனி அந்தப் பதவியில் தானே தொடர்வதாகவும் ராமதாஸ் அறிவித்து, இருவருக்கும் இடையேயான மோதலை மேலும் அதிகப்படுத்தியது.

 

அதேசமயத்தில் வன்னியர் சங்கத்தின் சித்திரை முழு நிலவு மாநாடு அறிவிப்பும் வெளியாகியது. இதில் இருவரும் இணைந்து பங்கேற்பார்களா என்றெல்லாம் பேச்சுகள் எழுந்த வேளையில் மீண்டும் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி இருவருக்கும் இடையே சமரசம் பேசி பிரச்சனையை முடித்துவைக்க இருவரும் அந்த மாநாட்டில் ஒன்றாகப் பங்கேற்றனர்.

 

அந்த மாநாட்டில் பேசும்போதும், ராமதாஸ் மறைமுகமாக அன்புமணியை கடுமையாக எச்சரித்தார் என அக்கட்சித் தொண்டர்களிடத்திலேயே பேச்சும், எதிர்ப்பும் எழுந்தது. இது குறித்து அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சமூக வலைதளத்திலே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

 

இந்நிலையில்தான் இன்று ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு அவர்களுக்குள்ளான மோதலை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது எனும் பேச்சுகளும் எழுந்துள்ளன. இப்படியான சூழலில், நாளை (30ஆம் தேதி) முதல் அன்புமணி மூன்று நாள்கள் பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகளை பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Right Menu Icon