ரேஷன் கடையில் கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை..!
ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக, கைரேகை பதிவு செய்யும் கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை சென்னையில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன.
இதில் வழங்கப்படும் பொருட்கள் சரியான எடையில் இல்லை என்றும் பல வகையில் முறைகேடுகள் நடப்பதாக நுகர்வோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இதற்கு தீர்வு காணும் வகையில் பிஓஎஸ் கருவியுடன் மின்னணு தராசு இணைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் சில ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி மின்னணு எடை தராசானது, வைபை – புளூடூத் வாயிலாக பிஓஎஸ் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஊழியர் தராசில் வைக்கும் பொருளின் எடை தான், கருவியில் பதிவாகும்.
இதன்மூலம் வழங்க வேண்டிய பொருட்களின் அளவும் தராசில் காட்டப்படும் பொருட்களின் அளவும் சரியாக இருந்தால் மட்டுமே பி ஓ எஸ் கருவி அடுத்த கட்ட செயல் முறைக்கு செல்லும்.
இதன் மூலம் சரியான எடைக்கு பொருட்கள் வழங்கப்படும் என்றும் எடை குறைவாகவோ, அதிகமாகவோ வைக்க முடியாது என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சோதனை அடிப்படையில் தற்போது சென்னையில் ஒரு சில கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






