--- --:--:-- --

பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

1

நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

 

நான்காவது நாளாக இன்றும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 25 புள்ளி 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. எமரால்டில் 13.2 சென்டிமீட்டர், அப்பர் பவானியில் 12.3 சென்டிமீட்டர், குந்தா மற்றும் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 11 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளது.

 

நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையில் நீர் மட்டம் 96 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி விநாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

 

இதன்காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வத்தலக்குண்டு பிரதான மலை சாலையில் அரசு மருத்துவமனை அருகே சாலையோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

 

இதனால், விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. அதேபோல பாபு என்பவரது ஒரு தகர வீடும் சேதம் அடைந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு ஆயிரத்து 397 கன அடியாக உள்ளது.

 

48 அடி கொண்ட அணையின் நீர் மட்டம் 38 அடியை நெருங்கியுள்ளது. இதேபோன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 42 அடியை தாண்டியது. அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை எச்சரிக்கை காரணமாக இன்று நான்காவது நாளாக குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Right Menu Icon