மாநிலங்களவை எம்.பி சீட்.. திமுகவிடம் மதிமுக முக்கிய கோரிக்கை..!
மாநிலங்களவை எம்பி பதவி மதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் மதிமுக கோரிக்கை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்ய சபா உறுப்பினர் பதவி நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
அந்த வகையில், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதேபோல, அதிமுகவின் சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலமும் முடிகிறது.
இதற்கான தேர்தலை அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜூன் 9ஆம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 10-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டி இருந்தால், அதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும், பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை அன்றைய தினமே மாலை 5 மணிக்கு தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆளும் திமுக கூட்டணிக்கு 159 வாக்குகள் இருப்பதால், 4 இடங்கள் உறுதியாக கிடைக்கும்.
இந்நிலையில், திமுக மூன்று இடங்களில் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி அரசுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுத்த வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேபோல, கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ததால் நடைபெற்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்ற எம்.எம்.அப்துல்லா, 4 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருந்த நிலையில், அவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.






