இரண்டாவது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை..!
சென்னையில் நேற்று 8 இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றும், வீட்டில் வைத்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மது விற்பனையில் முறைகேடு குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து, அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை முதல் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் உதவியுடன் ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டின் அருகே கிழித்து வீசப்பட்டிருந்த நகல் எடுக்கப்பட்ட whatsapp chat screenshot பேப்பர்களை அதிகாரிகள் சேகரித்துக் கொண்டனர். பின்னர் விசாகனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பிற்பகல் 3.45 மணிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு 5 மணி நேரம் நடந்த விசாரணையில் பல கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.
பின்னர் இரவு 8.45 மணி அளவில் அவரை மீண்டும் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.மேலும் திருவல்லிக்கேணியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர் வீட்டிலும், பெசன்ட் நகர் கற்பகம் கார்டன் பகுதியில் மின்வாரிய ஒப்பந்ததாரர் வீட்டிலும், தேனாம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடந்தது.



