அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுவதை உறுதி செய்க – அமித்ஷா
நாட்டில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுவதை உறுதி செய்யுமாறு மாநில முதலமைச்சர்களை தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார். பஹல்காம் தாக்குதல் நடைபெற்று பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், எல்லையில் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதலால் 28 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உலக தலைவர்களும் இந்தியாவிற்கு தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.இதனை தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
அனைத்து பாகிஸ்தானியர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. இந்நிலையில், மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அந்தந்த மாநிலங்களில் எவ்வளவு பாகிஸ்தான் நாட்டினர் இருக்கிறார்கள் என கணக்கீடு செய்து, அவர்கள் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்புவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதலமைச்சர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.





