துப்பாக்கிச் சூட்டில் இருந்து நூலிழையில் தப்பிய டிரம்ப்..!
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 25, 2026 இரவில் இந்திய நேரப்படி ஏப்ரல் 26 காலை 7 மணியளவில் , வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் மேடையில் இருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தில் டிரம்ப் மற்றும் மெலானியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், அவர்கள் நலமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹோட்டல் வளாகத்திற்குள் நான்கு முதல் ஆறு முறை பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக அங்கிருந்த ஒரு புகைப்படக்கலைஞர் தெரிவித்துள்ளார். இந்தச் சத்தம் விருந்து நடைபெற்ற பிரதான அரங்கிற்குள் கேட்கவில்லை என்றாலும், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் ஊடுருவி இருப்பதாக வெளியான ஆரம்பகட்ட தகவல்களால் அங்கிருந்த விருந்தினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
விருந்தில் பங்கேற்ற சுமார் 2,600 பேர் “கீழே குனியுங்கள்!” என்ற எச்சரிக்கை கூச்சலைக் கேட்டவுடன், அச்சத்தில் அங்கிருந்த மேஜைகளின் அடியில் தஞ்சமடைந்ததாக தெரிகிறது. அதே சமயம், அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள், முழுமையான பாதுகாப்பு கவசங்களுடன் அந்த இடத்தைக் கைப்பற்றி நிலைமையைச் சீர்செய்ய விரைந்தனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உயிருடன் பிடிபட்டுள்ளதாக டிரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பான தன் பதிவில் டிரம்ப், “பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர்” என பாராட்டியுள்ளார்.
டிரம்ப் தன் ட்ரூத் பதிவில், “நெறிமுறையின்படி, நாங்கள் இந்த வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சட்ட அமலாக்கத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி நாங்கள் உடனடியாக வெளியேறுவோம். இன்னும் 30 நிமிடங்களில் வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் சந்திப்பு அறையிலிருந்து, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவிருக்கிறேன். முதல் பெண்மணி (மெலோனியா டிரம்ப்), துணை அதிபர் மற்றும் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் நல்ல நிலையில் உள்ளனர். இந்த நிகழ்வுக்குப் பொறுப்பான அனைத்துப் பிரதிநிதிகளுடனும் நான் பேசியுள்ளேன்” என்றுள்ளார்.
மேலும் “வாஷிங்டன் டி.சி.யில் இது ஒரு மறக்க முடியாத மாலைப் பொழுது. ரகசிய சேவை மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். அவர்கள் விரைவாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் நிகழ்ச்சியைத் தொடரலாம் என்றே நான் பரிந்துரைத்துள்ளேன். ஆனால், இது முற்றிலும் சட்ட அமலாக்கத் துறையின் வழிகாட்டுதலின்படியே நடைபெறும் என்பதால், அவர்கள் அறிவுரைப்படி செயல்படுகிறேன்” என்றுள்ளார் டிரம்ப்.





