கேஸ் விலை உயர்வு இன்று முதல் அமல்..!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை என்ற அறிவிப்பு வெளியாகி பொதுமக்கள் பெருமூச்சு விடுவதற்குள், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் ஷாக் கொடுத்துள்ளன.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், அவற்றின் மீதான கலால் வரியை 2 ரூபாய் உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயாகவும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயாகவும் செவ்வாய்க்கிழமை முதல் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்குமோ என வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். ஆனால், சில்லறை விலையில் மாற்றம் இருக்காது என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.இது ஒருபக்கம் இருக்க, மறுமுனையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் ஷாக் கொடுத்தன.
பாஜக ஆட்சியில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன் பிறகு, சென்னையில் சிலிண்டர் விலை 818 ரூபாய் 50 காசுகளாக குறைந்தது. வணிக சிலிண்டர் விலை பல முறை உயர்த்தப்பட்டாலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஒரு ஆண்டாக அதே விலையில் தொடர்ந்தது. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால், இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்தனர்.
இதன்படி 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.868.50-க்கு விற்கப்படுகிறது. வருவாய் குறைவாக இருக்கும் சூழலில், சிலிண்டர் விலை உயர்வு மேலும் சுமையை அளிப்பதாக சாமானிய மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




