இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து, தென்தமிழகம் வரை வளி மண்டல சுழற்சி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த், காற்றழுத்த தாழ்வு பகுதியால் வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார். இதுகுறித்து அவர் கூறும்போது, “குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மழையை கொடுக்கும் என நாம் நினைத்துக் கொண்டிருப்போம்.
ஆனால் இப்போது உருவாகி இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி முழுக்க முழுக்க தமிழ்நாட்டிற்கு வெயிலை மட்டுமே கொடுக்கக்கூடிய ஒரு சுழற்சியாக தான் நாம் பார்க்க வேண்டும். தென்கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகி இருக்கக்கூடிய இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு கடற்கரையை நெருங்கி வருவதற்கு வாய்ப்பே இல்லை.
இதனால் தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தை நோக்கி செல்ல இருப்பதால் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மேலும் வறண்ட வானிலையை உருவாக்கவே வாய்ப்புள்ளது.
இந்த சுழற்சியால் கடலில் இருந்து வரும் காற்று தடைபடுவதால் வெப்பநிலை அதிகரிக்கவே வாய்ப்பு” எனத் தெரிவித்துள்ளார்.மேலும் இதனால் சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




