--- --:--:-- --

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை..!

3

மிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கொடைக்கானலில் தொடர்ந்து நான்காவது நாளாக மிதமான மழை பொழிந்தது.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலும் மழை கொட்டித்தீர்த்ததால் வெப்பம் தணிந்தது. தேனி மாவட்டம் கம்பத்தில் பெய்த கனமழையால், அழகு முருகன், காமாட்சி, முருகன், ராமகிருஷ்ணன் ஆகிய 4 பேரின் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. மதுரை மாநகரப் பகுதிகளில் மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. விருதுநகர் நகர் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சூலக்கரை, சத்திரரொட்டிபட்டி, பட்டம் புதூர், பேராலி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வெண்ணந்தூர் பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. கோவை மாநகரில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்தனர். மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததாகக் கூறப்படுகிறது. சென்னை மாநகர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல இடங்களிலும் லேசான மழை பெய்தது.

Right Menu Icon