2029-க்கு பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் பணிகள் – நிர்மலா சீதாராமன்
ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற நாட்டு நலன்களுக்காக கொண்டு வரப்படும் சட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.சென்னை காட்டாங்குளத்தூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழிசை செளந்தரராஜன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது 10 வருடமாக பல வல்லுநர்கள் பேசிய கருத்து என்றார். நாட்டு நலனுக்காக கொண்டு வரும் சட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் என்றார். இந்தியாவில் இதற்கு முன் இருந்த தேர்தல் முறையையே பிரதமர் மோடி மீண்டும் கொண்டு வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தலை ஆதரித்ததாகவும் அதுகுறித்து அவரது சுயசரிதையில் கூறப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார். தந்தை வழியில் நடக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தலை ஏற்காமல் எதிர்ப்பதாக குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படாது என்றார். 2029ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான பணிகள் தொடங்கும் என்றும், 2034க்குள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் சூழல் நிலவுவதாக கூறினார்.
இதற்கிடையே, திமுக கூட்டணியில் 5 ஆண்டுகள் எம்பியாக இருந்த போது அசவுகரியமான சூழலை எதிர்கொண்டதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். சென்னை காட்டாங்குளத்தூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கத்தில் பேசிய அவர், தமிழகத்தில் நாளுக்கு நாள் ஊழல் பெருகி வருவதே தான் கட்சி தொடங்குவதற்கு முக்கிய காரணம் என்றார்.





