உடல்நிலை வதந்திக்கு நேரலையில் நித்யானந்தா விளக்கம்!
தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேரலையில் தோன்றிய நித்யானந்தா, பரமசிவம் அருளால் நிம்மதியாக ஆனந்தமாக இருக்கின்றேன் என்று கூறினார். பல்வேறு வழக்குகளில் தேடப்படும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா, கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாயமானார். அவர், கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாகவும், அங்கு குடியேற மற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாசா நாடு என பெயரிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், கைலாசா நாட்டுக்கு என தனியாக கொடி, பாஸ்போர்ட், தனி நாணயங்கள் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியதோடு கைலாசா நாட்டுக்கான சர்வதேச தூதர்களையும் அறிவித்து அதிரடி காட்டினார் நித்யானந்தா.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சுயநினைவு இல்லாமல் நித்யானந்தா இருப்பதாகவும், அவர் மரணமடைந்து விட்டார் எனவும் பலவிதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவந்தன. ஆனால் அதன் பிறகு சில நாட்களிலேயே மீண்டும் ஆன்லைனில் தோன்றினார் நித்யானந்தா. அண்மையில் பொலிவியா நாட்டில், நில ஒப்பந்த விவகாரத்தில் அந்நாட்டு அரசு மோசடி குற்றச்சாட்டு சுமத்தியதுடன் நித்யானந்தாவின் பல பிரதிநிதிகளை நாட்டை விட்டும் வெளியேற்றியது.
இப்படியாக கைலாசா குறித்த சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், உடல்நலக்குறைவால் நித்யானந்தா மரணமடைந்ததாக தகவல் உலா வந்தது. இந்து தர்மத்தை காப்பதற்காக நித்யானந்தா உயிர் தியாகம் செய்து சமாதி அடைந்து விட்டதாக நித்யானந்தாவின் உறவினர் என கூறப்படும் சுந்தரேஸ்வரன், வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மையா, பொய்யா, வழக்கமான புரளியா என தெரியாமல் அவரது சீடர்கள் உள்ளிட்ட பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து முகநூலில் விளக்கம் அளித்துள்ள கைலாசா, நித்யானந்தா ஆரோக்கியமாக உள்ளதாகவும் மார்ச் 30ஆம் தேதி நடந்த உகாதி விழாவில் அவர் நேரலையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டது. இதற்கிடையே, இன்று அதிகாலை 4 மணி அளவில் நித்யானந்தா நேரலையில் தோன்றி பேசினார். தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேரலையில் தோன்றிய நித்யானந்தா, பரமசிவம் அருளால் நிம்மதியாக ஆனந்தமாக இருக்கின்றேன் என்று கூறினார்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுக்கு உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும் அதனால்தான் நேரலையில் வருவதை குறைத்து கொண்டதாகவும் நித்யானந்தா தெரிவித்தார்.அதேபோல், மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்சனைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன் என்றும், கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பல பேர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் அவர்களுக்கு ஏற்படும் கோபம் காரணமாக, அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன் என்றும் கைலாசாவை கைப்பற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.பொலிவியாவில் பழங்குடியின மக்களின் நிலத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை மறுத்த நித்யானந்தா, அண்ணாமலையார் சொல்வதை மட்டும் தான் செய்வேன் என்றும் வேறு யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




