கேஸ் தட்டுப்பாடு ஏற்படாது.. உறுதி அளித்த எண்ணெய் நிறுவனங்கள்!
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படாது என எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு ஆக்சல் லாரிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் மற்றும் எல்லா லாரிகளுக்கும் கிளீனர் வேண்டும் என்பதனை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் பதற்றம் அடையவேண்டாம் என்றும், சீரான, தங்குதடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளன.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மக்களின் நலன் கருதி, வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.





