--- --:--:-- --

தமிழகத்தில் பெய்து வரும் மழை..!

1

தமிழகத்தில் நேற்றிரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது சென்னை உட்பட பல இடங்களில் கனமழை வெளுக்கத் தொடங்கியுள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

 

ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், முடிச்சூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென மழை பெய்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் பேசியுள்ளார்.தனியார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்த் நியூஸ் 18 தமிழுக்கு அளித்த பேட்டியில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் இன்று மற்றும் நாளை அதிகாலை வேளையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

சென்னையில் அடுத்த வாரம் மழை தொடருமா என்பது குறித்து, வளிமண்டலத்தில் உருவாக வாய்ப்புள்ள புதிய சுழற்சியைப் பொறுத்துதான் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது பெய்து வரும் மழையானது, வடகிழக்கு பருவமழைக்காலத்தில் கிழக்கில் இருந்து வரும் ஈரப்பதத்தின் சாயல் காரணமாக ஏற்படுகிறது என்றும், இதனைக் கோடை மழை எனக் கூற இயலாது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

 

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும் ஈரப்பதம் காரணமாக இந்த மழை பெய்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மார்ச் மாதம் 2ஆம் வாரத்திற்குப் பிறகு, காற்றின் முறிவு காரணமாக உட்புறப் பகுதிகளில் மழை உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் காரணமாக உட்புறம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோடை மழை தொடங்கும் என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

 

நீண்ட கால வானிலை படிவங்களைப் பார்க்கும்போது, புயல் உருவாகுமா என்பது குறித்து தற்போது கணிக்க இயலாது எனவும், கோடை புயல்கள் பொதுவாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் என்றும், அரிதான சில நேரங்களில் மட்டும் தமிழக கடற்கரையை ஒட்டி நகரக்கூடும் என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

 

அடுத்த வாரம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் எனவும், இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வடகடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பை விட சற்று அதிகமாகவே இருக்கும் எனவும் நீண்டகால வானிலை படிவங்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேற்கத்திய காற்றின் வேகம் அதிகரிக்கும் போது, வெயிலின் தாக்கமும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon