--- --:--:-- --

அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிவுரை..!

3

திமுகவின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி அக்கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

 

நிர்வாகிகள் அனைவரும் தங்களது மாவட்டத்தில் இருந்தபடியே கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, பூத் கமிட்டி அமைப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். தொடர்ந்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கட்சிப் பொறுப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு உடனடியாக நிர்வாகிகளை நியமிக்கும்படி அறிவுறுத்தினார்.

 

பூத் கமிட்டி விரைவாக அமைத்து அந்த பட்டியலை தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், கட்சி கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

 

மேலும் அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா என அரசியல் களத்தில் கேள்வி எழுந்துள்ள நிலையில், அதுகுறித்தும் அதிமுக நிர்வாகிகளிடையே எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். நிர்வாகிகளிடத்தில், “நாம் யாருடன் கூட்டணி வைப்போம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. உங்கள் பணிகளை சிறப்பாக செய்யுங்கள். கூட்டணி குறித்து யார் கேட்டாலும் தலைமை முடிவெடுக்கும் என்று சொல்லுங்கள். 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற கடுமையாக உழையுங்கள்” என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon