மாவட்ட தலைநகர்களில் இன்று ஆர்ப்பாட்டம்..!
கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க அரசு தரப்பில் 4 மாத காலம் அவகாசம் கேட்டதால், அதை ஏற்காமல் மாவட்ட தலைநகர்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
எந்த வித போரட்டமும் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஏற்கனவே அறிவித்த சாலை மறியலை ரத்து செய்துவிட்டு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சரண்விடுப்பு, காலமுறை ஊதியம், பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கு மேல் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக திருச்சியில் கடந்த 4 ஆம் தேதி மாநில அளவிலான கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
அதன் படி, கடந்த 14 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வட்ட அளவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்தமும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.





