அறுபடை வீடுகள் உட்பட முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கோலாகலம்!
அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வடலூரில் சத்திய ஞானசபையில் 7 திரைகளையும் விலக்கி நடைபெறும் ஜோதி தரிசனம் தொடங்கியுள்ளது.
தமிழ்க் கடவுளான முருகனுக்கு நடத்தப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபடுவர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசத் திருவிழாவின் 6-ஆம் நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் மற்றும் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, தைப்பூசத் திருவிழா, அதிகாலையிலேயே சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர்.
தைப்பூச திருவிழாவையொட்டி, மதுரை – பழனி இடையே இன்றும், நாளையும் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து காலை 08.45 மணிக்குப் புறப்படும் ரயில், காலை 11.30 மணிக்கு பழனிக்குச் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் மாலை 3 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், 5.45 மணிக்கு மதுரை வந்தடைகிறது.
இதேபோன்று, 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் தைப்பூச விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 154 ஆவது ஜோதி தரிசன விழா காலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலம், பச்சை, சிவப்பு, கருப்பு, வெண்மை உள்ளிட்ட ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. நாளை அதிகாலை 5.30 மணிவரை 6 முறை திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இதையொட்டி, தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். குன்றக்குடி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து குன்றக்குடிக்கு, 108 காவடிகளுடன் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர்.
‘கந்தனுக்கு அரோகரா…முருகனுக்கு அரோகரா..” என பக்தி முழக்கமிட்டனர்.மலேசியாவில் பத்து மலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. திரும்பிய திசையெங்கும் ‘அரோகரா’ முழக்கம் மலைகளில் எதிரொலித்தது. பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.
இதேபோன்று, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஈப்போ கல்லு மலை, சுங்கை பட்டாணி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட்டது.





