--- --:--:-- --

ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிகட்டணத்தை குறைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை..!

3

திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அபரிமித கட்டணத்தைப் பாதியாகக் குறைப்பதுடன், இதர வசதிகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி மங்கலம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் குளத்தில் சுற்றுலா துறை சார்பில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. குறிப்பாக, திருப்பூர் மாநகரத்தில் மக்களுக்குப் பொழுது போக்கு வசதிகள் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை. வெள்ளிவிழா பூங்கா போக்குவரத்து நெருக்கடியுடன், குறுகலான இடத்தில் அமைந்துள்ளது.

 

இது தவிர மாநகராட்சிக்கு உரிய ரிசர்வ் சைட்டுகளிலும் பெரும்பாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. பூங்காக்கள், உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வதற்கான மைதானங்கள் மற்றும் பொழுது போக்கு வசதிகளும் இல்லை. திரையரங்கங்களில் வரைமுறை இல்லாமல் அபரிமித கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் நடத்தும் கண்காட்சிகள் வர்த்தக அடிப்படையில் மக்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக உள்ளன.

 

இந்த சூழ்நிலையில், ஆண்டிபாளையம் குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும் இந்த படகு இல்லத்தில் மோட்டார் படகு 2, துடுப்புப் படகு 3 மற்றும் பெடல் படகு 8 என மொத்தம் 13 படகுகள் உள்ளன. இதில் மோட்டர் படகில் 20 நிமிட பயணத்துக்கு ரூ.100, 4 இருக்கை பெடல் படகு மற்றும் 5 இருக்கைத் துடுப்புப் படகுகளில் 20 நிமிடப் பயணத்திற்கு நபர் ஒருவருக்கு ரூ.100, இரண்டு இருக்கை பெடல் படகில் 30 நிமிட சவாரிக்கு ரூ.150 வீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே நால்வர் கொண்ட குடும்பம் இங்கு படகு சவாரி செய்தால் குறைந்தது ரூ.400 செலவிட வேண்டும். இத்துடன் வாகன நிறுத்தக் கட்டணம், இதர செலவையும் சேர்த்தால் குறைந்தது ரூ.500 இல்லாமல் இங்கு வர முடியாது.

 

திருப்பூர் மாநகரில் வேறு பொழுதுபோக்கு வசதி இல்லாத நிலையில், ஆர்வத்துடன் வரக்கூடிய மக்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பது பெரும் சுமையாகும். சுற்றுலா தலங்களில் உள்ள படகு சவாரிகளுக்கு வசூலிக்கப்படுவதை விட அதிக கட்டணம் இங்கு வசூலிக்கப்படுகிறது. எனவே பல லட்சம் உழைக்கும் மக்கள் வசிக்கும் திருப்பூரில் இந்த படகு சவாரிக் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும்.

 

அத்துடன் விடுமுறை, பண்டிகை நாட்களில் ஆண்டிபாளையம் குளத்திற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும், மங்கலம் சாலையில் இயக்கப்படும் பேருந்துகளில் ஆண்டிபாளையம் குளம் பேருந்து நிறுத்தம் என்ற அறிவிப்பு செய்தும், திருப்பூர் மாவட்ட சுற்றுலாதலங்கள் பட்டியலில் இணைத்தும் மாவட்ட நிர்வாக இணையதளம் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்ய வேண்டும். சாமானிய மக்கள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இவற்றைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon