விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும் – அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் பிறந்தநாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்று வாழப்பாடி ராமமூர்த்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மதவாத சக்திகள் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே இருக்கக் கூடாது என அவர் காலத்தில் மிக தீவிரமாக களம் கண்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி” என்றார்.
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் தவெக தலைவர் விஜய்க்கு, பரந்தூர் சென்று மக்களைச் சந்திக்க அனுமதி அளித்திருப்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த அவர், “காவல்துறை அவருக்கு அனுமதி அளித்துள்ளது எனவே அவர் செல்கிறார். அங்கு இருக்கும் மக்கள் பாதிக்கக் கூடாது என்பது காங்கிரஸின் நிலைப்பாடு” என்று தெரிவித்த அவர், விஜய் திமுக கூட்டணிக்கு வருவது தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறியதாவது; “சனாதனத்தை எதிர்க்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தால், அவர் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும். இந்தியா கூட்டணிதான் சனாதனம், ஆர்.எஸ்.எஸ்.-ஐ எதிர்த்து இயக்க பணியில் கூட்டணியில் இருந்து வருகிறது. விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அதுதான் அவருடைய கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் நல்ல முடிவாக இருக்கும்.
அவர் மாநாட்டில் பேசியது போல், எதை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஒழித்து விடலாம். ஓரங்கட்டி விடலாம். ஆனால், மதவாத சக்திகளை இந்துத்துவா சக்திகளை அகற்ற வேண்டும் என விஜய் முன்னெடுப்பார் என்றால் அவர் இந்தியா கூட்டணிக்கு வருவது தான் நல்லது. இதை நான் ஒரு இந்திய பிரஜையாக சொல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.





