மனைவிக்கு வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்த கணவன்..!
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டிலேயே மனைவிக்கு கணவன் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த மனோகரன் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மூன்றாவது முறையாக கருவுற்றிருந்த இவரது மனைவிக்கு கடந்த 17ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்தே பிரசவம் பார்த்திருக்கிறார். இது தொடர்பாக whatsapp குழுக்களிலும் அவர் பகிர்ந்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் வட்டார மருத்துவர் அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் குன்றத்தூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அதில் வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம் என்ற பெயரில் உள்ள whatsapp குழுவின் மனோகரன் உறுப்பினராக இருந்ததும் அதில் பகிரப்பட்ட தகவல் அடிப்படையிலேயே மனைவியை மருத்துவமனைக்கு அளித்து செல்லாமல் வீட்டில் வைத்து அவர் பிரசவம் பார்த்ததும் தெரிய வந்திருக்கிறது.
தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் அதே சமயம் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு இரண்டு உயிர்களையும் ஆபத்தில் கொண்டு நிறுத்த வேண்டாம் என மருத்துவத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





