--- --:--:-- --

தமிழ்நாட்டில் தீபாவளியன்று காற்று மாசு கடந்தாண்டை விட குறைவு..!

9

மிழ்நாட்டில் தீபாவளி அன்று காற்று மாசு கடந்தாண்டை விட குறைந்து பதிவானதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பு தொடங்கி 15 நாட்களுக்கு காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

 

அதன்படி, தமிழ்நாட்டில் தீபாவளி அன்று அதிகபட்சமாக சென்னை வளசரவாக்கத்தில் 287 புள்ளிகள் என்றளவில் காற்றின் தரம் மோசமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் 200 புள்ளிகளுக்கு மேல் பதிவான நிலையில், திருவொற்றியூரில் குறைந்தபட்சமாக 150 புள்ளிகள் பதிவானது.

 

மாவட்டங்களை பொறுத்தவரை காஞ்சிபுரத்தில் அதிகப்பட்சம் 193 புள்ளிகள், சேலத்தில் 174 புள்ளிகள் பதிவானது. குறைந்தபட்சமாக கடலூரில் 80 புள்ளிகளும் திருப்பூரில் 82 புள்ளிகளும் பதிவானது. தீபாவளி பண்டிகையன்று மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையிலான ஒலி மாசு தமிழ்நாடு அளவில் ஓசூரில் அதிகப்பட்சமாக 91.5 டிபி(ஏ) என்கிற அளவில் பதிவானது.

 

சென்னை வளசரவாக்கத்தில் கடந்தாண்டு காற்று மாசு குறியீடு 365-ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 287 ஆக குறைந்துள்ளதாகவும், அதற்கு தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள், பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon